''
மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை பொது போட்டிக்கு விடப்படுவது சமூகநீதிக்கு எதிரானது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 432 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களை பொது போட்டிக்கு வழங்கிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு என்பது தகுதிக்கான தேர்வல்ல. போட்டித்தேர்வில் வெற்றி தோல்வி, குறைந்தபட்ச மதிப்பெண் என்பதெல்லாம் மோசடித்தனமாகும். இடஒதுக்கீட்டு உரிமை பெற்றவர்களின் கட் ஆப் மதிப்பெண்ணை படிப்படியாக குறைந்து இடஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக நிரப்புவதே சமூகநீதிக்கு உகந்தது.
அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணை கட் ஆப் மதிப்பெண்ணாக நிர்ணயித்துக்கொண்டு இடஒதுக்கீட்டு இடங்களை நிரப்பாமல் காலியாக விடுவதும், அந்த இடங்களை பொது போட்டிக்கு விட்டு விடுவதும் சமூகநீதிக்கு எதிரானதாகும். இது இடஒதுக்கீட்டை கொள்ளைப்புற வழியாக ஒழித்து கட்டும் நடவடிக்கையாகும்.
எனவே இந்த குறைப்பாட்டை சரிசெய்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் அனைத்தும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இதர பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை இடஒதுக்கீடு பெரும் உரிமையிலிருந்து நீக்கியது தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோருக்கும் இடஒதுக்கீட்டை வழங்கி சமூகநீதியை காத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்'' என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.