'
முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தாவிட்டால் 'கள்'ளை, டாஸ்மாக் கடைகள் மூலம் டின்களில் அடைத்து விற்கலாம்' என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கள்' இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி விவசாயிகளும், பனைத் தொழிலாளர்களும் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஏ.என்.சுந்தரேசன், பிரைட் ஜோசப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பூரண மதுவிலக்கு கொள்கையை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. அதே வேளை, முழு மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால், போதை குறைந்த, உடலுக்கு தீங்கு விளைவிக்காத 'கள்'ளை, டாஸ்மாக் கடைகள் மூலம் டின்களில் அடைத்து விற்கலாம்.
'கள்' விற்பனையை அனுமதித்தால், விவசாயிகளும், பனைத் தொழிலாளர்களுக்கு வருவாயும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதன் அடிப்படையில் 'கள்' இறக்க அரசு அனுமதி தரவேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.