''1,405
பேரில் ஒருவர் கூட ஓராண்டு சிறை தண்டனை மட்டுமே அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. ஏழாண்டுகள் நிறைவு பெற்ற பிறகு தான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று முதலமைச்சர் கருணாநிதி, கம்யூனிஸ்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில், மதுரை லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலே இருந்தவர்களை அண்ணாவின் நூற்றாண்டு விழாவினையொட்டி விடுதலை செய்திருப்பதை தா.பாண்டியன், வரதராஜன் போன்றவர்கள் கண்டித்திருக்கிறார்களே?
அண்ணாவின் பிறந்த நாளையொட்டியும், மற்ற தலைவர்களின் பிறந்த நாளையொட்டியும் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதென்பது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் இது தி.மு.க. ஆட்சியிலே மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அண்ணாவின் நூற்றாண்டு என்பதால் 7 ஆண்டு காலம் சிறையிலே இருந்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற புதிய முடிவினை ஒரு சலுகையாக அரசு எடுத்துள்ளது. ஆளுநரின் அனுமதியோடு இந்த முடிவினை எடுக்க அரசுக்கு உரிமையுண்டு.
1405 கைதிகளை விடுவிக்கும் போது அதிலே மதுரையைச் சேர்ந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் என்றும் கொலை செய்யப்பட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் எப்படி விடுவிக்கலாம் என்று கேட்கிறார்கள்.
மதுரையைச் சேர்ந்த லீலாவதி கொலை செய்யப்பட்ட போது தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தி.மு.க. என்பதற்காக எந்தத் தயக்கமும் காட்டப்படவில்லை. முறைப்படி கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலே தண்டிக்கப்பட்டு சிறையிலே இருந்த தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அந்த கைதிகள் ஆறு பேரில் முதல் குற்றவாளியான முத்துராம லிங்கம் 2004ஆம் ஆண்டே சிறையில் இறந்து விட்டார்.
மற்றொரு குற்றவாளி யான முருகன் என்பவர் பத்தாண்டுகள் சிறையிலே இருந்து, காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார். மற்ற நான்கு பேரில் இருவர் பத்தாண்டு காலம் சிறை தண்டனை முடித்தவர்கள். கருமலையான் என்ற கைதி 9 ஆண்டு கால சிறை தண்டனையை முடித்து விட்டார். இருந்தாலும் இப்போது அவர் விடுதலை செய்யப்படவில்லை. ஒரேயொருவர் தான் ஏழாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
1405 பேரில் ஒருவர் கூட ஓராண்டு சிறை தண்டனை மட்டுமே அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. ஏழாண்டுகள் நிறைவு பெற்ற பிறகு தான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டோர் பட்டியலில், கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர்கள் சொல்வதைப் போல அவர்கள் குறிப்பிடுபவர்கள் உட்பட மொத்தம் 356 பேர் ஏழாண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டவர்களாகும்.
கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த பாலதண்டாயுதம், ஓர் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பரோலில் விடுதலையாகி வெளிவந்த நிகழ்ச்சியும், அவர் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் - தோழர்கள் வரதராஜன், பாண்டியன் போன்றவர்கள் அறியாத வரலாறு அல்ல! என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.