நியாய விலை கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் மாநில முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவாயொட்டி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தை, சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இந்த திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மண்ணடி லிங்கி தெருவில் நடைபெற்ற விழாவில், நிதி அமைச்சர் க.அன்பழகன் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கி பேசினார்.
அண்ணா நகரிலும், அயன்புரத்திலும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேனாம்பேட்டையிலும், சேப்பாக்கத்திலும் நடைபெற்ற விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டையிலும், மயிலாப்பூரிலும் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்.
வண்ணாரபேட்டையில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக்கடையில் நடைபெற்ற விழாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி தொடங்கி வைத்தார்.
புதுப்பேட்டையிலும், பூங்காநகரிலும் நடைபெற்ற விழாவில், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைத்தார். பெரம்பூர் திரு.வி.க.தெரு அமுதம் சில்லரை அங்காடியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.பி.பி.சாமி தொடங்கி வைத்தார்.
தியாகராயநகர் கண்ணம்மாபேட்டையில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில் நடைபெற்ற விழாவில், மாநில திட்டக்குழுத்துணைத் தலைவர் மு.நாகநாதன் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதே போல் மாற்ற மாவட்டங்களிலும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.