ராமநாதபுரத்திலிருந்து சிறிலங்காவுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கடத்த முயன்ற சிறிலங்கா அகதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை கடற்கரைப் பகுதியான ஒத்தப்பூ என்ற இடத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகை மடக்கி சோதனை செய்தனர்.
அந்த படகில் டிவிடி பிளேயர்ஸ், டிஷ் ஆண்டெனா, வயர்கள் உள்பட பல்வேறு மின்சாதனப் பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக படகில் இருந்த ஜெலஸ்டின் மற்றும் முனியாண்டி என்பவர்களிடம் காவல் துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் இந்த மின்சாதனப் பொருட்களை சிறிலங்காவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருட்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் முனியாண்டி என்பவர் மண்டபம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் ஜெலஸ்ட்டின் கொட்டாம்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.