மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் (16.09.08) வணிகர் பேரவை சார்பில் நடைபெற உள்ள கடை அடைப்பு போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்வெட்டு பிரச்சினை கடந்த ஓராண்டாக இருந்து வருகிறது. இப்போது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. ஆட்சியாளர்கள் முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
விலைவாசி பிரச்சினை, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மக்களை அதிகளவில் பாதித்துள்ளது. போராட்டத்தின் முக்கியத்துவ்த்தை ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் வணிகர்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கிறது என்று கூறினார். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்தள்ளது.
மின்வெட்டை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.