டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று மாலை நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மாநில காவல் துறையினரையும் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், காவல் துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி.) கே.பி. ஜெயின் எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளார். இதையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா மேம்பாலம் போன்ற இடங்களில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய வழிப்பாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு விழிப்போடு இருக்கும்படி காவல்துறையினருக்கு, ஆணையர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே, தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு சதி கண்டுபிடிக்கப்பட்டு தீவிரவாதிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.