''2011
ஆட்சிக் கனவில் இருக்கும் ராமதாஸ் 2008-ல் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பார்த்து பேசினால் நன்றாக இருக்கும்'' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு உயர்கல்வி தேசிய சராசரியைவிட பின் தங்கி விட்டதாக கூறி உள்ளார். அவர் 2001-வது ஆண்டின் புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு இந்த குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். டாக்டர் அனந்தகிருஷ்ணனின் சமீபத்திய அறிக்கையில் தமிழகம் உயர்கல்வித் துறையில் 3-வது இடத்தில் இருக்கிறது.
ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை கடந்த 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையை வைத்தும், அப்போதிருந்த கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு புள்ளி விவரத்தை அவர் கேட்டு தெரிந்து அதன் பிறகு அறிக்கை வெளியிட்டு இருக்கலாம்.
முதலமைச்சர் கருணாநிதி பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் தமிழகம் கல்வி துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று இருக்கிறது. இப்போது நான் சொல்லும் விவரங்களை தெரிந்து கொண்ட பிறகாவது அவர் தனது குற்றச்சாட்டை திருத்திக் கொள்ள வேண்டும். நான் சொல்வதில் ஏதாவது குறை இருந்தால் அவர் சுட்டுக் காட்டட்டும். திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து திருச்சி, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கல்வியியல் பல்கலைக்கழகமும் புதிதாக 7 அரசு கலைக்கல்லூரிகளும், 6 பொறியியல் கல்லூரிகளும் இந்த அரசால் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதைஎல்லாம் தெரிந்து கொள்ளாமல் ராமதாஸ் குற்றம்சாற்றுகிறார். சுயநிதி கல்லூரிகளில் அயல் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் படிப்பதாக கூறி உள்ளார். உண்மை அதுவல்ல. 90 விழுக்காடு மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
பள்ளி, கல்லூரிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்க்கை நடைபெற்று அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். 2011 ஆட்சிக் கனவில் இருக்கும் ராமதாஸ் 2008-ல் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பார்த்து பேசினால் நன்றாக இருக்கும் என்று பொன்முடி கூறினார்.