காற்றாலைகளில் மூலம் மின் உற்பத்தி அளவு உயர்ந்துள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு இல்லாமல் மின்சப்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. அயல் மாவட்டங்களில் மூன்று மணி நேர மின்வெட்டு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தவறியதாலும், காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்ததாலும் 1,500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சமாளிக்க தமிழகம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
மின் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு 600 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசிடம் இருந்தும் கூடுதலாக பெற்றது. இதன் மூலம் ஓரளவுக்கு மின்வெட்டு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக காற்று அதிகமாக வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 300 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி இரண்டு நாள்களுக்கு முன்பு 1,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. நேற்று இதைவிட உயர்ந்து 1,800 முதல் 1,900 வரை மின்சாரம் உற்பத்தியானது.
இதன் காரணமாக நான்கு நாட்களுக்கு முன்பே முக்கிய நகரங்களில் மின்வெட்டு தற்காலிகமாக தளர்த்தப்பட்டது. மற்ற பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் செய்யப்பட்டு வந்த ஒரு மணி நேர மின்வெட்டும் தளர்த்தப்பட்டது. அயல் மாவட்டங்களில் பகலில் செய்யப்பட்டு வந்த 3 மணி நேர மின்வெட்டு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் கூறுகையில், ''கடந்த 3 நாட்களாக காற்றாலையில் இருந்து மின்சாரம் கூடுதலாக கிடைத்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்திருப்பதால் மின்சாரத்தின் தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று எந்த பகுதியிலும் மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை. நல்ல மழையும், காற்றும் தொடர்ந்து இருந்தால் மின்சார தட்டுப்பாடு பிரச்சினையே இருக்காது'' என்றார்.