"மலையாள மொழி பேசும் மக்கள் அனைவர் வாழ்விலும் வளம் குவிய, நலம் பொலிய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்" என்று முதலமைச்சர் கருணாநிதி ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,"மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் நாளை (12.09.08) ஓணம் திருநாள் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
கேரள மாநில மக்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், அவர்களின மிக முக்கியமான அறுவடைத் திருநாளாகவும் கலைமணம் கமழக் கொண்டாடப்படும் ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம், சூழ்ச்சி, வஞ்சகம் முதலிய குணங்கள் அகற்றப்படவேண்டும் என்பதையும்,
அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் மனித சமுதாயத்தற்கு உணர்த்திடும் நன்னாளாகும்.
சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் உளம் மகிழ்ந்து கூடிக்கொண்டாடும் இந்த ஓணம் திருநாளில் தமிழகத்தில் வாழும் கேரள மாநில மக்கள் அனைவரும் தம் உற்றார் உறவினர், நண்பர்கள் சூழ சிறப்பாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக அம்மக்கள் நிறைந்துவாழும் எல்லைப்புற மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும், சென்னை மாநகருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு விடுமுறை வழங்கிக் கேரள மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது தமிழக அரசு.
தமிழக மக்களின் மேன்மைக்காக மட்டுமல்லாமல் தமிழகத்தில் வாழும் அண்டை மாநில மக்களின் நலவாழ்விலும், வளவாழ்விலும் உரிய கவனம் செலுத்திவரும் தமிழக அரசின் சார்பில் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவர் வாழ்விலும் வளம் குவிய, நலம் பொலிய என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக" என்று கருணாநிதி கூறியுள்ளார்.