"
சினிமாவில் என்ன வசனம் பேசுகிறேனோ அந்த வசனம் வாழ்விலும் இருக்கும், ஒரே ஒருமுறை எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள், நேர்மையான ஆட்சியை கொடுப்பேன்'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. அவைத் தலைவர் கணபதி மகன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுகையில், அறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற 15ஆம் தேதி அன்று நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு போடப்போவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்போகிறார்கள். ஆனால் அந்த சோற்றுக்கு போடும் உப்பு ரூ.10 க்கு விற்கப்படுகிறது. இத்திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டமாகும். நியாயவிலைக் கடைகளில் நாற்றமான, மஞ்சள் நிறம்கொண்ட, மக்கிப்போன அரிசியைத் தான் வழங்குகிறார்கள்.
மின்சாரம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. ஆனால் தற்போது மின்வெட்டு நீடிக்கிறது. மின் வெட்டால் மக்களுக்கு உரிய `பவரை' பறித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக விடயங்களை செய்திகள் மூலம் தெரிந்து கொள்வதற்காக இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி தருவதாக கூறுபவர்கள் கேபிள் டி.வி. இணைப்பை இலவசமாக கொடுக்கலாமே?
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வுக்கு எத்தனையோ முறை சந்தர்ப்பம் கொடுத்து விட்டீர்கள். ஒரே ஒரு முறை தே.மு.தி.க.வுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள். நேர்மையான ஆட்சியை கொடுப்பேன். மக்களுக்காக நான் வாழ்வேன். சினிமாவில் என்ன வசனம் பேசுகிறேனோ அந்த வசனம் வாழ்விலும் இருக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.