இந்தியாவிலேயே தமிழக சுய உதவிக்குழுக்கள்தான் முதல் இடத்தில் உள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர், நெல்லை மாவட்டத்துக்கு ரூ.35 கோடி திட்டப்பணிகளை தொடங்கிவைத்ததோடு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடி சுழல் நிதியும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு மட்டும்தான் சுழல் நிதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதலமைச்சர் கருணாநிதி பதவியேற்றதும் இந்த திட்டம் நகர்ப்புற மற்றும் மாநகர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பல துறைகளில் தமிழகம் சாதனை படைத்து வந்தாலும், சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்களின் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழக சுய உதவிக் குழுக்கள்தான் முதலிடம் பிடித்துள்ளன.
தமிழகம் முழுவதும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி வரும் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தேர்தலின் போது சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் அவர் செய்து வருகிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.