சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் 3 பேர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் உள்ள 5 மாடிகளை கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் பாத்திர கடையில் கடந்த 1ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அக்கட்டிடத்தின் 3 மாடிகள் பலத்த சேதம் அடைந்ததுடன் கடையில் வேலைப் பார்த்து வந்த 2 ஊழியர்கள் தீயில் சிக்கி பலியானார்கள்.
இதையடுத்து மாம்பலம் காவல்துறையினர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகிய 3 பேரும் நேற்று சென்னை சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு அருணாசலம் முன்னிலையில் சரணடைந்தனர்.
அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் 3 பேரையும் 7 நாட்கள் விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாம்பலம் காவல்துறையினர் இன்று சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.