சிறிலங்க ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவ வீரர்களை மறைமுகமாக அனுப்பியிருப்பது இந்திய அரசின் தமிழன விரோத போக்காகும் என்று தெரிவித்துள்ள தொல். திருமாவளவன், அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்!
இந்த அரசின் இப்படிப்பட்ட மறைமுக நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் வவுனியாவில் உள்ள படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானம் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி இரண்டு ராடார்களை அழித்தனர். இதில், ராடார்களை இயக்கிய இந்திய வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இதனைக் குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் பலர் பலியாகியிருப்பதுடன் ஏராளமான சிங்கள படையினர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். அவ்வாறு படுகாயமடைந்தவர்களில் 2 இந்திய பொறியாளர்களும் அடங்குவர் என்பது தெரிய வருகிறது. இவர்கள் சிங்கள ராணுவ தளத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்திய ரேடார்களை இயக்குகிற பணிகளையும் அது தொடர்பாக சிங்கள படையினருக்கு பயிற்சி அளிக்கும் பணிகளையும் செய்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.
இந்தியஅரசின் இத்தகைய தமிழீன விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் போக்கை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழனத்திற்கு எதிராக ஈழத்தில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய படையினர் அனைவரையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16-ஆம் தேதி அன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.