கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக அண்ணா நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பால் உற்பத்தித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 5,000 கறவை மாடுகளை வழங்கிட ரூ.11 கோடியை அனுமதித்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " 2008-2009ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் " பால் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. பால் உற்பத்தியை மேலும் பெருக்கவும், பால் உற்பத்தி செய்யும் விவசாயக் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 உயர் கலப்பினக் கறவை மாடுகள் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை, தி.மு.க. அரசு செயல்படுத்தும்.
தமிழகத்தில் பால் உற்பத்தி செய்யத் தகுந்த 200 கிராமங்களில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலமாக, வரும் 2 ஆண்டுகளில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 5,000 மகளிர் பயனடைவர்”என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காகப் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பால் உற்பத்தித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கோவை, தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 100 கிராமங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 5,000 கறவை மாடுகளை வழங்கிட ரூ.11 கோடியை அனுமதித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இப்புதிய திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 41,000 லிட்டர் பால் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.