திருச்சியில் மணல் கொள்ளையை எதிர்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு மணல் குவாரியில் இருந்து கள்ளத்தனமாக மணல் திருடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மணல் திருட்டில் ஈடுபடும், தவறான பாதையில் செல்லும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி இதில் தலையிட்டு திருட்டுத்தனமான இந்த தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் தலைமையிலான பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்தனர்.