கரூர் மாவட்டத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காந்திகிராம் என்னுமிடத்தைச் சேர்ந்த ஷேக் முகம்மது என்பவர் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்க முயன்றார்.
இதுபற்றி உடனடியாக காவல் துறையினரிடம் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் விரைந்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கரூர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கள்ளநோட்டுக் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர் அளித்த தகவலையடுத்து, ஈரோட்டில் உள்ள மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (30), பவானி என்ற இடத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற கருப்பசாமி(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 126 பறிமுதல் செய்யப்பட்டது.