சென்னை: சென்னை தியாகராயநகர், உஸ்மான் சாலை பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், சென்னை தியாகராயநகர், உஸ்மான் சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பகுதியில் உள்ள நடைபாதை கடைகாரர்களுக்கு ரங்கநாதன் தெருவிற்கும், நடேசன் தெருவுக்கும் இடையில் உள்ள ரயில்வே பார்டர் சாலை பகுதியில் சென்னை மாநகராட்சி 200 கடைகளை அமைக்கின்றன.
இந்த தெருவானது 9 அடி அகலம் கொண்டது. ஆனால், இதில் 6 அடி அகலம் நடைபாதை வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்டு கூடாரம் அமைக்க இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த குறுகிய சாலையில் மிகவும் சக்திவாய்ந்த உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்ம்கள் உள்ளன.
மாம்பலம் ரயில் நிலையத்திற்கு இதன் வழியாக தினசரி 30,000 பேர் வந்து செல்கிறார்கள். உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்ம்கள் இருப்பதாகவும், நடப்பதற்கு குறுகிய இடமே இருப்பதாலும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தீ விபத்து, கட்டிடம் இடிதல் போன்ற சம்பவங்கள் நடந்தால் பெரிய ஆபத்துக்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும். ஆகவே, இந்த பகுதியில் நடைபாதை கடைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்து, இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பதில் அளிக்கும் படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், ''தற்காலிகமாக தான் இந்த குறிப்பிட்ட தெருவில் நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படுகின்றன. அப்பகுதி நடைபாதை வியாபாரிகளுக்காக மாநகராட்சி பெரிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.
10 மாதத்திற்குள் இந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியை முடித்துவிடுவோம். தரைதளத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படும். எக்காரணத்தை முன்னிட்டும் அந்த குறுகிய தெருவில் வரம்பு மீறி பொருட்களை குவித்து வைக்க அனுமதிக்கமாட்டோம். ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.
மாநகராட்சியின் இந்த பதிலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பாதசாரிகளுக்கு அந்த தெருவில் நடந்து செல்ல போதுமான இடத்தை ஒதுக்கித்தர வேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்கு மேல் இந்த தெருவில் உள்ள நடைபாதை கடைகளை இருக்க அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.