''
கடந்த 20 ஆண்டுகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து சொத்துக்கள் சேர்ப்பதில் அக்கறை செலுத்தினார்களே தவிர, மக்கள் நலனுக்காக உருப்படியான திட்டங்களை போடாததுக்கு இப்போதைய மின்சார நெருக்கடியே எடுத்துக்காட்டு'' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அனல் மின்சாரம், அணுமின் மின்சாரம் ஆகியவை ஆண்டு முழுவதும் நம்பக்கூடிய உற்பத்தியைக் கொண்டது. காற்றாலைகள் அல்லது நீர்நிலை மூலம் கிடைக்கும் மின்சாரம் ஆண்டு முழுவதும் நம்பத்தகுந்ததல்ல. அது காற்றையும், பருவமழையையும் பொருத்தது.
ஆகவே ஒரு நல்ல அரசு, நம்பத்தகுந்த மின் உற்பத்தி திட்டங்களை அதிகமாகப் போடவேண்டும். ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் காற்றாலை மின்சாரத்தை கணக்கிட்டு பெருமை அடித்துக் கொண்டதன் விளைவுதான் இப்போது தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணமாகும்.
முன்னாள் அமைச்சர் பெயரில், ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், அவர் ஆட்சியில் மின் உற்பத்தி நிலையங்களின் பட்டியலில் 2,047 மெகாவாட்டிற்கான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் தனியார் நடத்தும் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் 1,505 மெகாவாட்டை கழித்தால், 539 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களே, அன்றைய ஜெயலலிதா அரசால் போடப்பட்டன. இதில் 384 மெகாவாட் கொண்ட திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
இந்த விவரங்கள், மத்திய திட்டக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 11வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் பக்கம் 516ல் தெளிவாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து சொத்துக்கள் சேர்ப்பது, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க முயல்வது போன்றவற்றில் அக்கறை செலுத்தினார்களே தவிர, மக்கள் நலனுக்காக உருப்படியான திட்டங்களை போடாததுக்கு இப்போதைய மின்சார நெருக்கடியே எடுத்துக்காட்டு'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.