தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் செயல்படும் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணையினை தேர்வு செய்யப்பட்ட 40 மாணவிகளுக்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் 7 சேவை இல்லங்களும், 27 அரசு குழந்தைகள் காப்பகங்களும் இயங்கி வருகிறன.
சேவை இல்லங்களில் 16 முதல் 40 வயது வரையிலுள்ள விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் தங்களது இடையில் நிறுத்தப்பட்ட பள்ளிக் கல்வியினை 12 ஆம் வகுப்பு வரை தொடர்வதற்கும் தொழிற் பயிற்சிகளான தட்டச்சு பயிற்சி, தையல் பயிற்சி, கணினி பயிற்சிகளை பெறுவதற்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவும் ஆதரவற்ற மகளிருக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.
இதே போன்று 5 வயது முதல் 18 வயது வரை உள்ள பெற்றோர் இருவரையும் இழந்த தாய் அல்லது தந்தையை இழந்த, தொழுநோய் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும் பெற்றோர்களின் குழந்தைகள், ஆயுள் தண்டனை பெற்று தாய்-தந்தையை இழந்த குழந்தைகள், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் தங்களது பள்ளிக் கல்வியை 12ஆம் வகுப்பு வரையிலும் இலவசமாக அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கிப் பயில்வதற்கும் தமிழக அரசு உதவி செய்து வருகிறது.
இந்த சேவை இல்லங்களிலும், அரசு குழந்தைகள் காப்பகங்களிலும் படித்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற குழந்தைகள் 2 ஆண்டுகள் ஆசிரியை பயிற்சி பெற்று ஆசிரியை பணியில் சேர்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு (2007-2008) 40 மாணவியர்கள் தேர்வு செய்து, தாம்பரம் அரசு சேவை இல்ல வளாகத்தில் உள்ள ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் பயின்று வருகின்றனர்.
2008-09ஆம் ஆண்டு மொத்தம் விண்ணப்பித்த 278 விண்ணப்பதாரர்களில் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கான சேர்க்கை விதி முறைகளைப் பின்பற்றி 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற 20 மாணவியரும், தொழிற் கல்வி பாடப்பிரிவில் தேர்ச்சிப் பெற்ற 10 மாணவியரும் ஆக மொத்தம் 40 மாணவியர்கள் இனவாரியான இட ஒதுக்கீட்டை பின் பற்றியும், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் செயல்படும் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணையினை தேர்வு செய்யப்பட்ட மாணவியர்களுக்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.