சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்து பொருட்களை சூறையாடிய 15 வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல்நிலையத்தில், வழக்கறிஞர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வழக்கறிஞர்கள் அந்த காவல் நிலையத்துக்கு சென்றனர்.
அப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு, குற்றவியல் நடைமுறை சட்டம் 121 பிரிவின்படி சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்காமல், எதேச்சையான முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி காவலர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் சுமார் 100 வழக்கறிஞர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது சில வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்தது அங்குள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்களை சிதறடித்தனர். இதையடுத்து காவல்நிலையம் மூடப்பட்டது.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து பொருட்களை சூறையாடிதாக கூறி வழக்கறிஞர் சங்க செயலாளர் மோகனகிருஷ்ணன், உறுப்பினர்கள் ரஜினிகாந்த, லிங்கம், காமராஜ் உள்பட 15 பேர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.