தடைசெய்யப்பட்ட கேட்டமின் என்ற 1 கிலோ கிராம் எடையுள்ள போதைப் பொருளை அயல்நாட்டுக்கு கடத்த முயன்ற கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர் சென்னை விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கம்போடியா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில், அவரது கைப்பையில் 1 கி.கி. எடையுள்ள 'கேட்டமின்' என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டு விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிடிபட்ட இந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
விசாரணையில், அவர் அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றது தெரிய வந்தது. மேலும், இதற்கு முன்னர் இது போன்று தடை செய்யப்பட்ட போதைப் பொருளை கடத்தினாரா என்றும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.