500 சதுர வரையுள்ள வீடுகளுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் 15.5.2006 அன்று நிலவரப்படி மொத்தமுள்ள 15,460 தெருக்களில் குடிநீர் விநியோகக் குழாய்கள் இல்லாமல் இருந்த 474 தெருக்களில் சுமார் 60 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் ரூ.8.24 கோடி செலவில் பதிக்கப்பட்டன. சென்னைக் குடிநீர் வாரியம் 2,924 கி.மீ நீளம் குடிநீர் வழங்கல் குழாய்களை பராமரித்து வருகிறது.
கழிவுநீரகற்று அமைப்புகள் இல்லாமல் இருந்த 198 தெருக்களில் சுமார் 17 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் ரூ.3.14 கோடி செலவில் பதிக்கப்பட்டு உபயோகத்தில் உள்ளன. தற்போது விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் உள்ள 268 தெருக்களுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி செய்யப்பட்டு வருகின்றது.
சென்னைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவானது 540 மில்லியன் லிட்டரில் இருந்து 585 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டது. அதாவது நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 90 லிட்டரிலிருந்து 108 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, குடிநீர் இணைப்பு பெற 1000 சதுர அடி வரையுள்ள குடியிருப்பு வீடுகளுக்கு ரூ. 5,000ம் அதற்கு மேல் உள்ள வீடுகளுக்கு ரூ.7,500ம் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், கழிவுநீர் இணைப்பு பெறவும் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,500 கட்டணம் செலுத்த வேண்டும்.
சென்னை நகரில் மட்டும் வீட்டு வரி செலுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 6,18,689. இதில், தற்போது 4,94,428 வீடுகளுக்கு கட்டணம் செலுத்தி குடிநீர் இணைப்பை பெற்றுள்ளனர். மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி பெற்றுக் கொள்ளவும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களும் குடிநீர் இணைப்பு பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு முதலமைச்சர் கருணாநிதி அனுமதியுடன் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது 500 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை சென்னைக் குடிநீர் வாரியத்திடமிருந்து ரூ.100 மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குடிநீர் இணைப்பை ரூ.100க்கு பெறுபவர்கள் 500 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பையும் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று வட்டாட்சியர் சான்றிதழ் தேவையில்லாமல், அந்த சிரமத்தை நீக்கி 500 சதுர அடி வரை பரப்பளவு உள்ள அனைத்து வீடுகளுக்கும் வருவாய் துறை சான்று இல்லாமலேயே ரூ.100 கட்டணத்தில் குடிநீர் இணைப்பும் மற்றும் ரூ.100 கட்டணத்தில் கழிவுநீர் இணைப்பும் பொருளாதார நிலையில் பின்தங்கியோர் பெற்றிட இந்த அரசு ஆவன செய்துள்ளது.
இதன் மூலம், சுமார் 48,000 வீடுகளில் உள்ளவர்கள் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் இணைப்பு பெற்று பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.