''பல்வேறு திறமைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான குன்னக்குடி வைத்தியநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பல்வேறு சாகசங்களுக்கும், திறமைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான உலகப்புகழ் பெற்ற வயலின் மேதை கர்நாடக இசைஞானி டாக்டர்.குன்னக்குடி வைத்தியநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
குன்னக்குடி வைத்தியநாதன் போல் வயலினில் சாகசம் செய்யக்கூடியவர் பிறக்கவுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. உலகம் மாபெரும் கர்நாடக இசை மேதையை இழந்து விட்டது. அதைவிட ஓர் உயரிய மனிதரை இழந்துவிட்டது.
குன்னக்குடி வைத்தியநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர்: உலகெங்கும் புகழ் பெற்ற வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்து மனவேதனை அடைகிறேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்: பாமரரும் ரசிக்கும் வண்ணம் வயலின் இசைக் கலைஞராக புகழ் பெற்று விளங்கியவர் குன்னக்குடி வைத்தியநாதன். இசைத்துறையின் மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே உலகளவில் புகழ் சேர்த்தவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு: குன்னக்குடி வைத்தியநாதன் மறைவு கர்நாடக இசைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணித் தலைவர் டாக்டர் ந.சேதுராமன்: குன்னக்குடி வைத்தியநாதன் தியாகராஜ ஆராதனை விழாவை சிறப்பாக நடத்தியவர் என்றும், இவரது இசை மனிதர்களின் கவலையை மறக்கச் செய்யும் அருமருந்தாக திகழ்ந்தது.