இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை-கன்னியாகுமரி இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை முதல் திருச்சி வரை தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் திருச்சி-மதுரை இடையே மின்மயமாக்கப்பட்டு விடும். மதுரையில் இருந்து தூத்துக்குடி மற்றும் மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் இடையே ரூ.142 கோடியில் மின்மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி இடையே இன்னும் இரண்டு ஆண்டுகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
திண்டுக்கல் - மதுரை இடையே உள்ள 62 கிலோ மீட்டர் தூர மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணியில் 73 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன. மேலும், திண்டுக்கல் - கொடைரோடு இடையே உள்ள 22 கி.மீ. தூர மீட்டர் கேஜ் பாதை முற்றிலுமாக அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு விட்டது. வரும் 31ஆம் தேதிக்குள் இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும் அகல ரயில்பாதையாக மாற்றியமைக்கப்படும். நெல்லை-திருச்செந்தூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்துள்ளார். பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் அந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று வேலு கூறியுள்ளார்.