செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று சாலையோரத்தில் நின்ற மரத்தில் மோதிய விபத்தில் வருமானவரித்துறை அதிகாரி உள்பட மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
கும்பகோணத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று இன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த வருமான வரித்துறை அதிகாரி லாவண்யா (25), ஜெயஸ்ரீரி (58), நடத்துனர் மனோகரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் 5 பெண்கள் கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.