சேது சமுத்திர திட்ட பணிக்காக இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது என்றும் இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்டவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நடந்து வரும் தங்க நாற்கர சாலைப் பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண்.7-ல் உள்ள பணகுடி முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை தவிர மற்ற அனைத்து 4 வழிச்சாலைகளும் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்.
இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை பணியை பொறுத்தவரை 5,846 கிலோ மீட்டரில் 181 கிலோ மீட்டர் தவிர மற்ற பணிகள் அனைத்தும் 97 விழுக்காடு வரை முடிந்து விட்டன.
ரயில்வேத்துறை பாலத்திற்கான வடிவமைப்பைப் போட்டு தருவதில் காலதாமதம் ஏற்படுவதால் ஒரு சில இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளன. இதனால் வரும் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில்வே பாலங்கள் அமைப்பதில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் 5,000 கிலோ மீட்டர் நீள சாலைகள் இருவழிச்சாலைகளாக மாற்றப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,250 கி.மீ. நீள சாலை இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது.
சேது சமுத்திர திட்ட பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது. இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்டவேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.