தமிழகத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்திற்குக் கடத்த முயன்ற 14 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகில் உள்ள கோவிந்தபுரம் சோதனைச் சாவடி பகுதியில் குடிமைப் பொருள் வினியோகத்துறை தனி வட்டாச்சியர் பாண்டியராஜன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்தபோது, அந்த லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து அந்த லாரியைப் பின்தொடர்ந்த அதிகாரிகள், திவான்சாபுதூர் சூரியபாறை என்ற இடத்தில் மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரியின் டிரைவரும் கிளீனரும் தப்பியோடினர்.
லாரியைச் சோதனையிட்டபோது அதில் 14,000 கிலோ கடத்தல் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் இருந்த அரிசி ஜோதி நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான நவீன அரிசி ஆலையில் ஒப்படைக்கப்பட்டது.