செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தனது சேவையை வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு சன் டி.வி. தனது சேனல்களை தருவதற்கு தாமதித்து வருவதுடன் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு சேனல்கள் தர நாங்கள் காலதாமதம் செய்யவில்லை. அரசு அதிகாரிகள்தான் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள் என்று சன் நெட்வொர்க் ஒரு முழுப் பொய்யை அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார்கள்.
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சன் நெட் வொர்க் நிறுவனம் கேட்ட சட்டப்படியான அனைத்து விவரங்களையும் அவ்வப்போது கொடுத்தும் கூட அவர்களது சேனல்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு வழங்காமல் தாமதம் செய்து கொண்டு வருகிறார்கள். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் கால அவகாசம் எந்த கட்டத்திலும் சன் நெட்வொர்க் நிறுவனத்திடம் கேட்கப்படவே இல்லை.
ஏற்கனவே திட்டமிட்டபடி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னை மாநகரத்திலும், வேலூரிலும், நெல்லையிலும் அமைக்கப்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் அரசு கேபிள் டி.வி. தனது சேவையை வழங்கிட உள்ளது.
தஞ்சையிலும், கோவையிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் அரசு கேபிள் டி.வி. தனது சேவையை தற்போது வழங்கி வருகிறது.
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தனது சேவையை வழங்கும். அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷனின் முயற்சிகளுக்கு அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும், தொலைக்காட்சி ஒளிப்பரப்பாளர்களும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்கிட முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.