கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற போது மின்சாரம் போனதால் உருவான இருளில் மணப்பெண்ணிற்கு பக்கத்தில் நின்றிருந்த பெண்களின் கழுத்தில் தாலி கட்டிவிட்டனர் இரண்டு மாப்பிள்ளைகள்!
சுவாரஸ்யமான இந்த சம்பவம் பெரியகுளம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஒரே நேரத்தில் 40 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தபோது எதிர்பாராமல் அரங்கேறியது.
40 ஜோடிகளின் திருமணம் என்பதால், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த 40 ஜோடிகளுக்கும் ஒரே நேரத்தில் மந்திரம் ஓதி, தாலி கட்ட தயாராக இருந்த போது மின்சாரம் போனது. அந்த இருளிலேயே 40 ஜோடிகளும் தாலி கட்டியதால் இரண்டு மாப்பிள்ளைகள் ஆள் மாற்றி தாலி கட்டியுள்ளனர்.
வீராசாமி என்பவர், சுப்புலட்சுமி என்ற பெண்ணிற்கு தாலி கட்டியிருக்க வேண்டும். ஆனால், சுப்புலட்சுமிக்கு அருகில் இருந்த அவரது தோழிக்கு வீராசாமி தாலி கட்டிவிட்டார்.
இதேபோல, பாலமுருகன் என்பவர் தான் தாலி கட்ட வேண்டிய சிவகாமிக்கு அருகில் இருந்த வேறொரு பெண்ணிற்கு தாலியைக் கட்டிவிட்டார்.
விஷயம் பெரியவர்களின் கவனத்திற்கு வந்ததையடுத்து, தவறுதலாக தாலி கட்டப்பட்ட பெண்களின் கழுத்தில் இருந்து தாலி கழற்றப்பட்டு, அதற்குரிய பரிகார பூஜை செய்யப்பட்டது.
பின்னர் தங்களின் சரியான மணப்பெண்களுக்கு வீரசாமியும், பாலமுருகனும் தாலி கட்டினர்.
40 ஜோடிகளுடைய உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் அதிகமாக சேர்ந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.