சென்னையில் இன்றும் நாளையும் விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.
கடந்த 3ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் 800 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டன. தற்போது இந்த சிலைகளுக்கு தினமும் பூஜை நடக்கிறது.
இதுதவிர, 10,000 சிறிய விநாயகர் சிலைகளும், பெரிய விநாயகர் சிலைகளோடு வைக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்றும், நாளையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
சிவசேனா (குமாரராஜா பிரிவு) கட்சி சார்பில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. சென்னை தங்கசாலை பேருந்து நிலையம் அருகிலிருந்து ஒரு பிரிவினரும், தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து இன்னொரு பிரிவினரும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள்.
பிற்பகல் 12 மணிக்கு புறப்படும் இந்த ஊர்வலம் தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக பட்டினப்பாக்கம், சீனிவாச நகர் கடற்கரையை சென்றடையும். அங்கு ராட்சத கிரேன் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்படும்.
தங்கசாலை பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்படும் ஊர்வலம் ராயபுரம் வழியாக சென்று காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையை சென்றடையும். அங்கு சிலைகள் கடலில் கரைக்கப்படும்.
நாளை இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதர்), இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத் பிரிவு) ஆகிய அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகின்றன.
இந்த விநாயகர் சிலைகள் பல்கலை நகர், பட்டினப்பாக்கம் சீனிவாசநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற 7 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் ஊர்வலத்துக்கு 20,000 காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.