சென்னை: ''தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஐயப்பாடு விரைவில் தெளிவாக்கப்பட உள்ளது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகையில், இந்திய திருநாட்டின் மூத்த பல்கலைக் கழகங்களில் முதலாவதாக கொல்கத்தா பல்கலைக் கழகம், இரண்டாவதாக மும்பை பல்கலைக் கழகம், ஆகியவற்றை அடுத்து மூன்றாவது பல்கலைக் கழகமாக 5.9.1857 அன்று தொடங்கப்பட்ட பழமையான பல்கலைக்கழகம் இந்த சென்னைப் பல்கலைக் கழகம்.
சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி அரசு நடைபெற்றபொழுது 1923 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் சட்டம் 1923 என்ற சட்டம் தான் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இன்று வரையிலும் உறுதிமிக்க சட்டமாக இருந்து வருகிறது. உயர்கல்விக்கு நீதிக் கட்சி அளித்த கொடை என்றே இச்சட்டம் அழைக்கப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்கல்வி பெறுவதற்கும், பல்கலைக் கழகத்தில் அவர்கள் ஆசிரியர்களாக இடம் பெறுவதற்கும் முதன்முதலில் நீதிக் கட்சி ஆட்சிதான் வழி வகுத்துக் கொடுத்தது என்பது சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள சான்றாகத் திகழ்கிறது.
மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட எதிர்ப்புகள் ஆர்ப்பரித்து எழுந்த போதும், அந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் இந்தியா முழுவதும் வாழும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி உச்ச நீதிமன்றத்தின் மூலம் அதனை நிலைநாட்டித் தந்துள்ள பெருமைக்குரிய சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தமிழக மக்களின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சிறுபான்மையினரான கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நீதியரசர் ஜனார்த்தனம் கமிஷன் மூலம் தலா 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதிலே கிறித்தவர்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடும் விரைவில் தெளிவாக்கப்படவுள்ளது. அருந்ததியருக்கு தனி வாரியம் கண்டதோடு, தனி ஒதுக்கீடும் அளிப்பதற்கு அரசி னால் அமைக்கப்பட்ட ஜனார்த்தனம் கமிஷனின் அறிக்கையை அரசு எதிர் பார்த்து இருக்கிறது என்று கருணாநிதி கூறினார்.