சென்னை : சென்னை சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து தொடர்பான வழக்கில் கடை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் இரண்டு ஊழியர்கள் பலியானார்கள். இது தொடர்பாக கடையின் மேலாளர் செல்வம், கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோர் கைது செய்ப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தங்களையும் காவல்துறையினர் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் முன் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி, பதில் மனுத் தாக்கல் செய்ய காவல்துறையினர் அவகாசம் கேட்டதால் மனு மீதான விசாரணை 5ஆம் தேதி (இன்று) தள்ளி வைத்தார். அதன் படி இந்த மனு நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைராஜ், இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 5 பேரில் மனுதாரர்கள் முதல், 2 வது குற்றவாளிகள். தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடனடியாக வெளியேறுவதற்கு அவசர வழியோ, தீயணைப்பு வசதியோ இல்லை. தீயணைப்பு சான்றிதழும் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் கடை உரிமையாளர்களுக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி ரகுபதி, இருவரின் முன் பிணையை தள்ளுபடி செய்தார். மேலும் கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து தொடர்பான வழக்கில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. ஆனால் இந்த தீ விபத்து நிகழ்வில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், தீயணைப்புத் துறை, மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.