கிராமப் புறங்களில் தற்போது ஏற்பட்டுள்ள 5 மணி நேர மின்வெட்டு நான்கு மணி நேரமாக குறைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது மின் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் வழங்கக் கோரி அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று டெல்லி சென்றார்.
அங்கு அவர் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு குறித்தும் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 600 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 600 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு கூடுதலாக வழங்குகிறது. உடனடியாக 100 மெகாவாட் வழங்கப்பட்டது.
300 மெகாவாட் மின்சாரத்தை இன்றும், 200 மெகாவாட் மின்சாரத்தை வரும் 10ஆம் தேதியும் வழங்கும். 600 மெகாவாட் மின்சாரத்தை வைத்து சமாளிக்க முடியாது. தமிழகத்திற்கு 1,500 மெகாவாட் தேவை.
பருவ மழை முழுமையாக பெய்தால் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும். மத்திய அரசு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் வழங்குவதால், கிராமப்புறங்களில் 5 மணி நேர மின் வெட்டை 4 மணி நேரமாக குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.