அணுசக்தி ஒப்பந்தம் பற்றி நாடாளுமன்றத்தில் பொய் சொல்லிய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல்நாட்டு சக்திகளின் கட்டளைப்படி செயல்படவும், அயல்நாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் இயங்கவும், இந்தியாவின் நடவடிக்கைகளை உட்படுத்தும் வகையில் ஓர் (அணுசக்தி) ஒப்பந்தத்தை மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றத் துடிக்கிறது.
இதன்மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசு நம் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளிடம் அடகு வைத்திருக்கிறது. இத்தகைய ஓர் அரசை நாம் இனியும் நம்ப முடியாது. இந்த அரசு நாடாளுமன்றத்திலேயே பொய் சொல்லியிருக்கிறது.
இந்த அரசு, இந்த தேசத்தையே ஏமாற்றியிருக்கிறது. இந்த அரசு இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அரசு நம் மக்களை கைவிட்டிருக்கிறது. இந்த அரசு மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.
இந்த அரசு மக்களின் துயரங்களைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை. கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், வரலாறு காணாத விலைஉயர்வு, பகிரங்கமாகத் தெரியும் லஞ்ச ஊழல், பற்றாக்குறையாய் இருக்கும் எரிசக்தி மின்சாரம், மதக் கலவரம், சமூகங்களிடையே பிணக்கு, பல் வேறு இடங்களில் பசி, பஞ்சம், பட்டினி.
இந்தப் பிரச்சனைகளெல்லாம் மத்திய அரசுக்கு பொருட்டாக தெரியவில்லை. இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய அரசு பதவி விலக வேண்டும். உலகத்தின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக உள்ள 110 கோடி இந்திய மக்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கக்கூடிய நிலையில், இந்த அரசு இனியும் தொடரக்கூடாது.
டாக்டர் மன்மோகன் சிங், கற்றறிந்த பொருளாதார வல்லுநர், நேர்மையான மனிதர் என்று நான் இதுவரை மதிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு சர்வதேச அரங்கில் தன்னுடைய அனைத்து மரியாதையும், நம்பகத்தன்மையையும் இழந்தவராக மன்மோகன் சிங் நிற்கிறார்.
அவர் சேர்ந்திருக்கும் அரசியல் கூட்டு காரணமாகத்தான் இந்த மரியாதை இழப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனக்கு ஏதேனும் சுயமரியாதை இன்னமும் இருப்பதாக அவர் நினைத்தால் டாக்டர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்'' என்று ஜெயலலிதா வற்புறுத்தியுள்ளார்.