''காசு உள்ளவர்கள் தான் படிக்க முடியும் என்ற அவல நிலையை மாற்றி, எல்லோருக்கும் கல்வி கிடைக்கச் செய்யும் உயர்நிலையை அடைய இன்றைய ஆசிரியர்கள் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம்'' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில், அடுத்த தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் கல்வியின் முன்னேற்றத்தை பொருத்தது.
கல்விப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆசிரியர்கள் மன நிம்மதியோடு பணியாற்ற வேண்டியது அவசியம். அவர்களது வாழ்க்கை நிலைமையும், பணி நிலைமையும் சிறப்பாக அமைய வேண்டும்.
எங்களுக்கு கிடைத்த ஆசிரியர்கள் போல் எவருக்கும் கிடைக்காது என்று மாணவர்கள் பெருமைப்படுவதும், எங்களுக்கு கிடைத்த மாணவர்களைப் போல் யாருக்கும் கிடைப்பது அரிது என்று ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைவதும் தான் கல்விப் பணியின் வெற்றிக்கு அறிகுறி.
தமிழ்நாட்டில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது. காசு உள்ளவர்கள் தான் படிக்க முடியும் என்ற அவல நிலையை மாற்றி, எல்லோருக்கும் கல்வி கிடைக்கச் செய்யும் உயர்நிலையை அடைய இன்றைய ஆசிரியர்கள் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம்.
இந்த நாட்டின் குடியரசுத் தலைவராகவே ஆசிரியர் பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்தார் என்பதே ஆசிரியர் பணி எவ்வளவு மகத்தானது என்பதைக் காட்ட போதுமானது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.