''வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிற நோக்கத்தை அரசு கேபிள் டிவி மீது அவதூறு பரப்புபவர்கள் சட்டப்படி அணுக வேண்டிய நிலைமை தவிர்க்க முடியாதது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் "மாநில அரசு கேபிள் நிறுவனத்தை தொடங்குவதற்கான அனுமதியை முறைப்படி மத்திய அரசிடம் விண்ணப்பித்து சட்டப்படி பெற்றுத்தான் இதனை நடத்த தொடங்கி உள்ளது.
அரசு ஒரு கேபிள் நிறுவனத்தை தொடங்கும்போது, அதற்கு அனைத்து டிவிகளும் ஒத்துழைப்பு நல்குவது தானே முறை. நேற்று சன் டிவியில் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசு கேபிள் டிவிக்கு சன் டிவி தன் சேனல்களை தர மறுப்பதாக கூறுவது அப்பட்டமான பொய் என்று கூறி இருக்கின்றது. இணைப்பு கொடுக்கவில்லையாம், ஆனால் அதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிக்கிறார்களாம். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றால் இன்னும் இணைப்பு கொடுக்கவில்லை என்பது தானே உண்மை. அதிலே என்ன பொய் இருக்கிறது.
மற்றவர்கள் நடத்தும் ஜெயா டிவி, மக்கள் டிவி ஆகியவை அரசு டிவிக்கு ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், ஒரு நிறுவனம் மட்டும் குதர்க்கம் செய்வது தாமதப்படுத்தும் நடவடிக்கையே தவிர, கடைசி வரை இணைப்பு கொடுக்காமல் இருக்க முடியாது. அரசாங்கமே மக்கள் நலனுக்காக இந்த செயலை ஆற்றிட முற்பட்டால் நாங்கள் எங்கள் சேனல்களை வழங்க மாட்டோம் என்று கூறி பிரச்சனையை ஏற்படுத்துவது யார்? தேவை யில்லாமல் இடைஞ்சலையும், தாமதத்தையும் ஏற்படுத்தி எப்படியாவது குழப்பத்தை உருவாக்க நினைப்பது யார்?
என்னைப் பொறுத்தவரை காவல் துறை அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுரைகள் வழங்கி உள்ளேன். இதில் சட்டம்ஒழுங்குக்கு கெடுதல் ஏற்படுத்தும் எண்ணத்துடன் யார் செயல்பட்டாலோ அல்லது தூண்டி விட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
ஒருவர் இன்னொரு நிறுவனத்தின் கம்பியை வெட்டுவது என்ற புகார் எந்த தரப்பிலிருந்து வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு பாரபட்சமற்ற நேர்மையான அரசுதான் முக்கியமே தவிர, சொந்தம் என்பதெல்லாம் எப்போதும் கிடையாது.
அரசு தொலைக்காட்சிக்கு சன் டிவி மட்டும் சேனல் வழங்காமல் இல்லை. ஸ்டார், சோனி, ஜி குழுமங்களும் அரசு டிவிக்கு சேனல் தரவில்லை என்று பெரிய விளக்கத்தை அந்த நிறுவனம் தனது அறிக்கையிலே கூறியிருக்கிறது.
அவர்கள் குறிப்பிடுகின்ற இந்த ஒரு சில நிறுவனங்கள் ஜி குழுமத்தை தவிர சன் தொலைக்காட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற டிவிக்கள் என்பதை தொழில் புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
ஜி குழுமத்தின் சேனல்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சையில் ஒளிபரப்பி வருகிறது. ஒன்றுமறியாத பாமர மக்களை இப்படியெல்லாம் எழுதி ஏமாற்றலாம். அரசு கேபிளுக்காக வக்காலத்து வாங்கும் இவர்கள் அங்கே ஆர்சிவியை ஆரம்பித்து அரசு கேபிள் வராமல் தடுக்க முனைவது ஏன்? என்று சன் டிவி கேட்டுள்ளது.
ஆர்.சி.வி.யை ஆரம்பித்து அரசு கேபிள் வராமல் தடுக்க அவர்கள் முயற்சிப்பதாக இவர்கள்தான் இட்டுக்கட்டி கூறுகிறார்களே தவிர, ஆர்.சி.வி.யாக இருந்தாலும் சரி, வேறு எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அவர்கள் அரசு நிறுவனத்தோடு ஒத்துழைத்துத்தான் செயலாற்ற போகிறார்கள். அப்படித்தான் செயலாற்ற வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல் மதுரையில் ஏதோ அரசு டிவி நிறுவனமே வராது என்பது போல நினைத்துக் கொண்டு அறிக்கை விட்டுள்ளார்கள்.
மதுரை உட்பட, சென்னை உட்பட, நெல்லை உட்பட அனைத்து இடங்களிலும் வரும் 15ஆம் தேதி முதல் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட உள்ளது. அரசு கேபிள் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மற்ற நிறுவனங்கள் எல்லாம் பணியாற்ற போகின்றன.
இதை எல்லாம் மறைத்துவிட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிற நோக்கத்தை அரசு கேபிள் டிவி மீது அவதூறு பரப்புபவர்கள் சட்டப்படி அணுக வேண்டிய நிலைமை தவிர்க்க முடியாதது" என்று கருணாநிதி கூறியுள்ளார்.