தங்களின் அலைவரிசைகள் திருடப்பட்டு வினியோகம் செய்யப்படுவதாக சன் நெட்வொர்க் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மதுரை ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி.) நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சன் நெட்வொர் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மதுரையில் நடத்தி வரும் ஆர்.சி.வி. நிறுவனம் எங்களின் கட்டண அலைவரிசைகளைப் பெறுவது தொடர்பாக எங்களுடன் எந்தவித உடன்பாடும் செய்துகொள்ளவில்லை. அனுமதியும் பெறவில்லை.
ஆனால், அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மக்களக்கு சன் டிவி, கே டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் உள்ளிட்ட எங்களுடைய கட்டண அலைவரிசைகளை வழங்குகின்றனர். இது அப்பட்டமான திருட்டு ஆகும்.
அனுமதியில்லாமல் எங்களுடைய கட்டண அலைவரிசைகளைத் திருடியதன் மூலம், எங்களின் காபி ரைட் உரிமைகள், நாங்கள் ஒளிபரப்பும் திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றின் காபி ரைட் உரிமைகள் ஆகியவற்றையும் ஆர்.சி.வி. நிறுவனம் மீறியுள்ளது.
இதனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு ஈடாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஆர்.சி.வி. நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களைக் கண்டறிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும்.
இவ்வாறு சன் நெட்வொர்க் நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால், இதுகுறித்து ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு ஆர்.சி.வி. நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.