காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் மீன தொழில்நுட்ப நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கையெழுத்தானது.
நவீன தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சிகளை அளிப்பதற்கான 'நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம்' ஒன்றை அமைத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தச் சிறப்புப் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசின் முதற்கட்ட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இப் பயிற்சி நிலையத்தை அமைத்திட காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் முட்டுக்காடு கிராமத்தில் 1.16 எக்டேர் நிலத்தினை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்தப் பயிற்சி நிலையத்திற்கு தொழில்நுட்ப உதவி முதலான அனைத்துவகை உதவிகளையும் டாடா குழுமம் வழங்கிறது. டாடா குழுமத்தின் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் மீன் வளத்துறையின் முதன்மைச் செயலர் லீனா நாயர், டாடா நிறுவனத்தின் சார்பாக கிருஷ்ணகுமார் கையெழுத்திட்டனர்.
இத் திட்டத்தின் தொழில்நுட்பப் பங்களிப்பாளரான டாடா நிறுவனம் மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல், கடல் மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றின் செயலாக்கச் செயல்பாடுகள் குறித்து இந்திய மற்றும் அயல்நாட்டுத் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோடு விரிவாக ஆய்வு செய்து திட்டத்தை வடிவமைக்கும்,
ஃபிட் சங்கத்தின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும், வலைக் கூண்டுகளை அண்மைக்கடல் பகுதிகளில் நிறுவி மீன் உற்பத்தியினை அதிகரிக்கவும், அதற்கான மீன் குஞ்சுகளைப் பொறிப்பகங்கள் மூலம் உற்பத்தி செய்தல், மீன் வளர்ப்பிற்கான மீன் உணவு தயாரித்தல், மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன்விற்பனை செய்தல் ஆகிய பணிகளை மேற் கொள்ளும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.