''ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தால் வறுமையை போக்கிவிட முடியாது'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஜூன் வரை, தொழில் முதலீட்டை பெற்றதில் 10 முன்னணி மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்கள் கூட பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
‘தொழில் முதலீட்டை பெற்றதில் முன்னணியில் இருக்கிறோம். மூன்று முன்னணி மாநிலங்கள் வரிசையில் தமிழகமும் ஒன்று’ என்று சொல்லி வந்ததெல்லாம் இன்றைக்கு பொய்யாகி வருகின்றன.
இந்த நிலையில், ‘தொழில் நிறுவனங்களுக்காக நில உச்சவரம்பு (15 ஸ்டாண்டர்டு ஏக்கர்) சட்டத்தை திருத்த போகிறோம்' என்று தமிழக அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம் நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்க முற்பட்டிருக்கின்றனர். வசதியுள்ளவர்கள், கறுப்பு பணக்காரர்கள், இருக்கிற காலி நிலங்களையும் விளை நிலங்களையும் வளைத்துப் போடுவார்கள். இதனால் உள்ளூர் மக்களுக்கு இனி சொந்த வீடு என்பது கனவாக முடிந்து விடும்.
'அண்ணாவின் கனவை நிறைவேற்றுகிறோம்' என்று சொல்லி ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித்திருக்கின்றனர். இதன்மூலம், 'ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவார்கள்' என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்.
இவர்களுடைய இத்தனை ஆண்டு ஆட்சிக்கு பிறகும் தமிழகத்தில் இன்னமும் இவ்வளவு பேர் 2 ரூபாய்க்கு அரிசி வாங்கி வாழ முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று அறியும் போது இந்த அறிவிப்பால் எப்படி மகிழ்ச்சி கொள்ள முடியும்.
அரிசி விலையை குறைப்பதைவிட மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். அதற்கு எல்லோருக்கும் வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதைவிட உழைத்து சம்பாதிக்கிற பணம் முழுவதும் குடும்பத்துக்கே செலவழிக்கும் நிலை உருவாக்க வேண்டும்.
அதற்கு மதுக்கடைகளை மூட வேண்டும். அண்ணாவின் இந்த கனவை நிறைவேற்ற முன்வராமல் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தால் வறுமையை போக்கிவிட முடியாது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.