சென்னையில் இன்று நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
சென்னை மெரீனாவில் இன்று நடந்த மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் (22) என்பவரும் கலந்து கொண்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சென்னை ஐஸ் அவுசில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
இவர் இன்று நடைபெற்ற 21 கி.மீ. மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். இதில் பங்கேற்ற சந்தோஷ் குமார் காந்தி சிலை அருகே மாரத்தான் போட்டி முடியும் தருவாயில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மெரீனா காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாரடைப்பு ஏற்பட்டு இவர் இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே மரணம் அடைந்த மாணவர் குடும்பத்திற்கு 'கிவ் லைவ்' அமைப்பு சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.