தமிழகத்தில் தற்போது மின் நிலைமை பின்னடைந்துள்ளதால், நிலைமை சீரடையும் வரை அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும், விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பத்திரிகைகள் மூலம் வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு: தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பின் மின்வாரியம் மூலமாக மூன்று நிலையங்களை நிறுவுவதற்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 600 மெகாவாட் திறன் கொண்டவையாகும்.
மத்திய அரசின் கொள்கையின் படி 4,000 மெகாவாட் திறனுள்ள அல்ட்ரா மெகா பவர் பிராஜக்ட் ஒன்றினை செய்யூரில் நிறுவுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் திறமையாக இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் பின்வரும் காரணங்களால் மின் நிலைமை திருப்திகரமாக இல்லை.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தமிழகத்தின் நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டை விட தற்போது நீரின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. மேலும் இதர தென் மாநிலங்களிலும் மின் நிலைமை திருப்திகரமாக இல்லை என்பதால் தென்னக கட்டமைப்பின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தியும் 1,500 மெகாவாட் குறைந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்த போதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது. குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
மத்திய தொகுப்பிலிருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன் வந்த போதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது. குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு, மத்திய அரசை கோரியுள்ளது.
சென்ற மாதம் ஏற்கனவே மின் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அவை முறையாக ஜூலை 21ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டன. நிலைமை சீரான போது பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
ஆனால் தற்போது மின் நிலைமை பின்னடைந்துள்ளதால் சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க இயலாததாகிறது. அனைத்து பொது மக்களும் நிலைமை சீரடையும் வரை அரசுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிலைமை சீரடைந்த உடன் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மாணவர்கள் படிப்பதற்கும், வீடுகளில் மாலை நேர தேவைக்கும் மின்சாரம் வழங்குவது அரசின் தலையாய நோக்கமாகும். எனவே விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இச்சமயத்தில் மின்னாக்கிகளை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு உதவி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. வர்த்தக மையங்களிலும், பொது விழாக்களிலும் தேவையற்ற ஆடம்பர விளக்குகளை அமைக்க வேண்டாம் என்றும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.