அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 15ஆம் தேதி நியாய விலைக்கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையடுத்து, இன்று மாலை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் கிலோ 2 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா நூற்றாண்டு விழா தொடக்க நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வேண்டிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதன் மூலம் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 400 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.