விசைத்தறியாளர் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கண்ட முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விசைத்தறியாளர்கள் பிரச்சனை தீர்வுக்கு எட்டப்பட்டதன் விளைவாக கடந்த 13 நாட்கள் நீடித்த அவர்களது வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.
விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளுக்கு நெசவுக் கட்டணத்தை நூறு விழுக்காடு உயர்த்த வேண்டுமென்ற விசைத்தறியாளர்களின் கோரிக்கை தொடர்பான பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி அறிவுறுத்தியதன் பேரில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் பேசி உடன்பாடுக்கு கொண்டு வந்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.
அதன்படி சோமனூர் ரகத்துக்கு 32 விழுக்காடும், இதர ரகங்களுக்கு 27 விழுக்காடும் நெசவுக் கட்டணத்தை உயர்த்தி வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் சம்மதித்துள்ளனர். அந்த உடன்பாட்டை விசைத்தறியாளர்கள் வரவேற்று வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர்.
எனவே அத்தொழிலில் இருந்து தேக்கநிலை நீக்கப்பட்டு முன்னேற்றம் காண வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த சுமூகத் தீர்வுக்கு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் கருணாநிதி, உடன்பாடு கண்ட அமைச்சர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தங்கபாலு கூறியுள்ளார்.