முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உள்பட மூன்று பேரை சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் தங்களை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நாகமுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மாநில உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஆகியோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது. ஏனெனில், குற்றவியல் நடைமுறை சட்டம் 435ன் படி மத்திய புலனாய்வு கழகம் புலன் விசாரணை செய்த வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது.
நளினி உள்ளிட்ட 3 பேரும் தங்களை விடுதலை செய்யக்கோரி ஆலோசனை குழு முன்பு மனுத் தாக்கல் செய்திருந்த விண்ணப்பங்களை ஆலோசனை குழு நிராகரித்துள்ளது. அவர்கள் 3 பேரின் மனுக்களை நிராகரித்த ஆலோசனை வாரியம், இதற்கு 3 காரணங்களை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதமரை கொலை செய்தது, திட்டமிட்டு கொடூரச் சம்பவத்தை நிகழ்த்தியது, விடுதலைப்புலிகள் மீதான உணர்வு இன்னும் குறையாமல் உள்ளது என்று ஆலோசனை வாரியம் கூறியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நளினியின் நன்னடத்தைக்காக அவருடைய சிறை தண்டனை காலத்தில் 545 நாட்களை சிறைத்துறை குறைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள் தண்டனையை குறைக்கலாம் என்பது நிர்வாக காரணமாக எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அது பொருந்தாது. ஆகவே, நளினி உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் கேட்டுக் கொண்டதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு நீதிபதி நாகமுத்து தள்ளி வைத்தார்.