மதுரையில் உள்ள வைகை அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. வைகை அணைக்கு அளவுக்கு அதிகமாக நீர் வந்து கொண்டிருந்ததால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வைகை அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால் வெள்ள எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளது என்றும், இருந்தாலும் நிலைமை கண்காணிக்கப்படுகிறது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். தற்போது அணையில் 66.31 அடி தண்ணீர் உள்ளது.
நேற்று அணைக்கு 2,111 கனஅடி நீர் வரத்து இருந்தது. இன்று 1,915 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 41 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.