"
தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை முகாம்கள் நடத்துவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்படும்'' என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
பெரம்பலூரில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை சார்பில், விழுப்புரம் மாவட்டம் கடுவனூர், நயினார் பாளையம் கிராமங்களில் கடந்த இலவச கண் சிகிச்சை முகாமின் போது பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண் பரிசோதனையும், அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
இந்த சிகிச்சைக்கு பின் பலருக்கு கண்பார்வை பறிபோனது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கண் பார்வையை இழந்த 29 பேர் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பார்வையிழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பார்வை இழந்து சிகிச்சை பெற்று வருகின்றன 29 பேரை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்குழுவின் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அந்த அறிக்கை வந்த பிறகுதான் சொட்டு மருந்தில் தவறா? அல்லது அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறா? என்பது தெரியவரும். அறிக்கை வந்த உடன் யார் மீது தவறு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிமேல் இலவச கண்சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டுமானால் முன்கூட்டியே மாவட்ட ஆட்சியரிடம் கண்டிப்பாக உரிய அனுமதியை பெற வேண்டும். இலவச முகாம்கள் நடத்துவதற்கான விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.