சிறிலங்க தமிழர் பிரச்சனைக்கு ஆதரவு தெரிவித்து வரும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரையும் சந்தித்து பேச உள்ளேன் என்று சிறிலங்க சமூக நலத்துறை அமைச்சர் பி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
சொந்த பயணமாக குடும்பத்துடன் தமிழகம் வந்த சிறிலங்க சமூக நலத்துறை அமைச்சர் சந்திரசேகரன், திருச்சியில் உள்ள சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவானைகோயிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிறிலங்க தமிழர் பிரச்சனைக்கு விஜயகாந்தும், சரத்குமாரும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் நல்லுறவை பயன்படுத்தி சிறிலங்க தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு தலையிட வலியுறுத்த வேண்டும்.
இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசியல் கட்சித் தலைவர்களையும், முதலமைச்சர் கருணாநிதியையும் சந்தித்து பேசியுள்ளேன் என்று அமைச்சர் சந்திரசேகரன் கூறினார்.