சென்னை உள்பட 8 மாவட்டங்களில் சத்துணவுக் கூடங்களில் எரிவாயு அடுப்பு வாங்குவதற்கு மொத்தம் ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சமூக நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த 2007-08ம் ஆண்டில் திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், கரூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 625 சத்துணவு சமையல் கூடங்கள் ரூ1.50 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டது.
2008-09 ஆண்டில் நீலகிரி, ஈரோடு, கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சென்னை மாநகராட்சியில் உள்ள 350 சத்துணவு சமையல் கூடங்களை, மொத்தம் ரூ.70 லட்சம் செலவில் நவீனப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மையத்திற்கும் தலா ரூ.20,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சமையல் எரிவாயுக்கு டெபாசிட் ரூ.850, ரெகுலேட்டர் ரூ.100, நான்கு சமையல் எரிவாயுக்கு ரூ.3800, இரண்டு பர்னர்களுடன் கூடிய பெரிய எரிவாயு அடுப்பு ரூ.5200, வால்வு மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ரூ.5000, அடுப்பு மேடை, தடுப்பு சுவர், புகைப் போக்கி ஆகியவைகள் அமைக்க ரூ.6000 என செலவிட வேண்டும்.
இத் திட்டத்தை முறையாக செயல்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சத்துணவு மையங்களில் 100 பேருக்கு குறைவாக பயனாளிகள் இருந்தால் நான்கு சமையல் எரிவாயு தேவையில்லை. அந்த மையங்களில் எத்தனை எரிவாயுகள் தேவை என்று ஆய்வு செய்து அதற்குரிய தொகையை ஆட்சியர் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.