சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல் நேற்றிரவு நடந்த விபத்தில் 4 பேர் பலியாயினர்.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு தொடர்பாக ஐசக் என்பவருடன் மின்சார ரயிலில் இன்று காலை பரங்கிமலை சென்றார்.
அங்கு இறங்கிய அவர்கள், நீதிமன்றத்திற்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு சென்ற மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது.
இதில் வழக்கறிஞர் ஜோதிராம லிங்கம், ஐசக் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதேபோல் நேற்றிரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மீனம்பாக்கம்- திரிசூலம் ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியானார்கள்.
இறந்தவர்களில் 45 வயது மதிக்கத்தக்க ஆணும், 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும் மற்ற இரண்டு பேர் 6 முதல் 8 வயது ஆனவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.